| ADDED : பிப் 24, 2024 05:05 AM
மதுரை : ''தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைக்கு வந்த எஸ்.சி., எஸ்.டி., (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் )ஆணையத்தில் 2 ஆண்டுகளாக 982 மனுக்கள் நிலுவையில் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.2021ல் இந்த ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைவராக கொண்டு ஒரு துணைத்தலைவர், 4 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டது. தலைவருக்கு மாத சம்பளம் ரூ.2.5 லட்சம், துணைத் தலைவருக்கு ரூ.1.28 லட்சத்திலிருந்து ரூ.2.61 லட்சம், உறுப்பினர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் முதல் ரூ.2.54 லட்சம், பயணப்படி, தங்கும் வாடகை கட்டணம் என்று அனைத்து சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆணையத்திற்கென்று தளவாட பொருட்கள், வாகனங்கள், அவுட் சோர்சிங் முறையில் தேவைகேற்ப பணியாளர்கள் என மிகப்பிரமாண்ட பொருட்செலவில் துவங்கப்பட்டது. தலைவர் முதல் அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்(36 மாதங்கள்) மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள 982 மனுக்கள் இப்போது உள்ள ஆணையத்தின் உறுப்பினர்களை கொண்டு முடித்துவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ரூ.கோடிக்கணக்கில் அரசு செலவு செய்யும் ஆணையத்தின் செயல்பாடுகளை அறிய தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் பெற்றேன். 2021 அக்., 13 முதல் 2023 நவ.,30 வரை மொத்தம் 3337 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 2355 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. 982 மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆணையத்தின் பதவிக்காலம் முடிய 8 மாதங்களே உள்ள நிலையில் இம்மனுக்களுக்கு எப்படி தீர்வு காணபோகிறார்கள் எனத்தெரியவில்லை.ஆணையத்தில் மனுதாரர்களின் வழக்கு விசாரணைக்கு வருபவர்களுக்கு பயணப்படி, வழக்குகளை நடத்தும் முறை, விசாரணை முடிவு பரிந்துரைகள், பதிவாளர் நியமிக்கப்படாத நிலை என்று பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன.ஆணையத்தின் முகவரி, அதன் செயல்பாடுகளை அறிய இணையதளம் உருவாக்கப்படவில்லை. ஆணைய செயல்பாடுகள் குறித்து குழு அமைத்து கருத்துகேட்க வேண்டும். அப்போது தான் குறைகள் சரிசெய்யப்பட்டு ஆணையம் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.