| ADDED : டிச 08, 2025 06:07 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் காய்ச்சல், சளி, தொற்று நோய் அதிகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 72 ஊராட்சிகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த மழையால் கிராமப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் துாய்மை பணியாளர்களைக் கொண்டு ஓரளவுக்கு மழைக்காலங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். கிராமப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்ததாலும், பல ஊராட்சிகளில் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினாலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமங்களில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு கிராமத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதித்து, நோய் தொற்று ஏற்பட்டு சளி, இருமலுடன் மருத்துவமனை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை. அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஊராட்சி செயலர்கள் நிதி இல்லை என்கின்றனர். அரசு உடனே ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியை விடுவித்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாத வகையில் மழை நீர், கழிவு நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.