| ADDED : டிச 06, 2025 05:47 AM
மதுரை: 'தேர்தல்களில் ஊழல் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்,' என தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசினார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (எம்.எம்.பி.ஏ.,) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 'லோக்பால், 'லோக் ஆயுக்தா' மற்றும் வாக்காளரியல்,' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தலைவர் ஐசக்மோகன்லால் தலைமை வகித்தார். லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசியதாவது: மக்களாட்சியில் ஓட்டு, வாக்காளர், தேர்தல் சம அளவிலான முப்பரிணாமங்களாகும். வாக்காளர்களின் அறியாமை ஊழலுக்கு வித்திடும். ஊழல் உச்சகட்டத்தை அடையும்போது மக்களாட்சி நிறுவனங்கள் சர்வாதிகார அமைப்புகளாக மாற நேரிடும். வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க, அதிகாரம் அளித்தலை வலுப்படுத்த தேசிய, மாநில அளவில் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேர்தல் வழக்குகளுக்கு 6 மாதங்களில் தீர்வுகாண தீர்ப்பாயங்கள் உருவாக்க வேண்டும். மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பிற்கான சர்வதேச சட்டங்களை போல் வாக்காளரியல் சட்டங்களை ஐ.நா.,உருவாக்க வேண்டும். வாக்காளரியல் முதுகலை பட்டப்படிப்பை பல்கலைகள் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் வாக்காளரியல் கல்வி கற்பிக்க வேண்டும். நல்லாட்சி, நியாயமான தேர்தல் நடைபெற வாக்காளர் விழிப்புணர்வு மட்டுமே சிறந்த கருவி. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் அனைத்து அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்.,-ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது என்றார். சட்டக் கல்வி அமைப்பு நிர்வாகிகளான வழக்கறிஞர்கள் அஸ்வின் ராஜசிம்மன், ஷாஜிம் சாகர் பங்கேற்றனர்.