| ADDED : நவ 22, 2025 12:12 AM
திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை பள்ளிக்கு கிழவனேரி, அச்சம்பட்டி, ஆலம்பட்டி பகுதிகளில் இருந்து 25 மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு, டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் உதவியாளராக இருந்தார். திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில், ராஜபாளையம் ரோடு சந்திப்பிற்கு அருகில் வந்த போது, வேனின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும் புகை வெளிவர தொடங்கியது. சமயோசிதமாக வேனை ரோட்டோரத்தில் டிரைவர் நிறுத்தினார். வேனில் இருந்த குழந்தைகள் அவசர அவசரமாக கீழே பத்திரமாக இறக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் வேன் முழுதும் தீ பரவி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து வந்த, திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், நான்கு வழிச்சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வேன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.