| ADDED : நவ 13, 2025 06:08 AM
மதுரை: ''தமிழ் இணைய நுாலகத்தை 17 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்'' என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் மதுரையில் பேசினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் தமிழியக்க 8 ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். நாட்டில் எங்கேயும் இல்லாத வகையில் அகழாய்வு இடத்திற்கு அருகிலேயே உள்ளவாறு கீழடி அருங்காட்சியம் அமைத்துள்ளோம். கீழடியில் தோண்ட, தோண்ட கி.மு., 800 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்து வருவது தமிழ் வரலாற்றின் தொன்மையை உணர்த்துகிறது. தமிழ் இணைய நுாலகத்தை கணினியுகத்திற்கு ஏற்ப லட்சக்கணக்கான நுால்களை இலவசமாக படிக்கும் வகையில் நவீனப்படுத்தியுள்ளோம். இதில் 2015 முதல் 2021 வரை 1.5 கோடியாக இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது 17 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் 199 தமிழ்ச் சங்கங்கள் தமிழ் இணைய நுாலகத்தை பயன்படுத்த இணைந்துள்ளன என்றார். தியாகராஜர் கல்லுாரித் தாளாளர் ஹரி தியாகராஜன், தமிழியக்க பொதுச் செயலாளர் அப்துல்காதர், மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார், கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்றனர்.