மதுரை: லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ரூ.95 லட்சம் வரை செலவிட தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கிறது. பிரசாரத்தின் போது ஊர்வலம், பொதுக்கூட்டம், வாகன அணிவகுப்பு, போஸ்டர் ஒட்டுதல் என எதைச் செய்தாலும், அனைத்தும் வேட்பாளர் கணக்கில் தான் ஏறும். இதனை தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தேர்தல் செலவின பார்வையாளர் கண்காணிப்பார்.ஒரு வேட்பாளர் வாரம் 2 முறை செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வேட்பாளர் வாகனங்கள், மேடை, போஸ்டர், ஒலிபெருக்கி, கரகாட்டம், வாழை தோரணங்கள், பட்டாசு என பிரமாண்ட படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவார்.இதனுடன் பணியில் ஈடுபடும் கட்சியினருக்கான சாப்பாடு செலவு, போக்குவரத்து என ஒவ்வொன்றுக்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளது.மதுரை தொகுதியை பொறுத்தவரை நகராட்சி நிர்வாகத்திற்கான மண்டல இயக்குனர், வட்டார போக்குவரத்துஅலுவலர் ஆகியோர் அடங்கிய குழு இதை நிர்ணயித்துள்ளது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள கட்டணம் வருமாறு:4 ஸ்பீக்கர்களுடன் ஒலிபெருக்கி ரூ.2183, கூடுதல் ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் ரூ.208. ஒரு டியூப்லைட் ஒரு நாளுக்கு ரூ.63. சீரியல் செட் ரூ.273. ஏர்கூலர் ரூ.420. சாமியானா பந்தல் (150 சதுர அடி) ரூ.1320. ஒரு பிளாஸ்டிக் சேர் வாடகை (ஒரு நாளுக்கு) ரூ.38, டிஜிட்டல் பேனர் (ஒரு சதுரடி) ரூ.73.காகித கொடி (100க்கு) ரூ.88, துணிக்கொடி (100க்கு) ரூ.230, பொன்னாடை போர்த்தும் டவல் 1க்கு ரூ.135, சால்வை ரூ.180, வேட்டி ரூ.217, சேலை ரூ.163, மாநகராட்சி பகுதியில் 'ஏசி' வசதியுள்ள திருமண மண்டபம் ஒரு நாளுக்கு ரூ.1.60 லட்சம், சாதாரண மண்டபம் ரூ.1.20 லட்சம், (இதுவே நகராட்சி பகுதியில் முறையே ரூ.68 ஆயிரத்து 333, ரூ.39 ஆயிரம், டவுன் பஞ்., பகுதியில் முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், கிராம பஞ்.,பகுதியில் முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம்). இசைக்குழு (10 பேர்) ரூ.60,333, நடனமாடும் பொம்மை ரூ.2500, பெரிய குடைகள் 2 ரூ.650, சுவர் விளம்பரம் 1 ச.அடி.,க்கு ரூ.18, உணவு வகைகள்
டிபன் (சைவம்) ஒருவருக்கு ரூ.90, மதிய உணவு ரூ.110, அசைவ உணவு ரூ.140. மட்டன் பிரியாணி ரூ.197, சிக்கன் பிரியாணி ரூ.137. ஆடம்பர ஓட்டலில் டிபன் ஒருவருக்கு ரூ.233, உணவு ரூ.333, அசைவ உணவு எனில் மதிய உணவு ரூ.567, சாதாரண ஓட்டலில் டீ ரூ.17, காபி ரூ.23, இளநீர் ரூ.87, சமோசா ரூ.13, ஸ்நாக்ஸ் அயிட்டம் ரூ.20.பைக் பயன்பாடு இருந்தால் பெட்ரோல் ஒரு நாளுக்கு ரூ.143, ஒரு எல்.இ.டி., 'டிவி' பயன்பாடுக்கு ரூ. 3533, வாழை மரம் ஒன்றுக்கு ரூ.153, கரும்பு ரூ.23, மினிபஸ் வந்தால் ரூ.6033, கட்சி சின்னத்துடன் ஒரு டி ஷர்ட் பயன்படுத்த ரூ.307, கரகாட்ட குழு (ஒரு பெண்)- ரூ.1133, ஒரு ஆண் ரூ.1233. இதுபோல ஒவ்வொரு பொருளுக்கும் தேர்தல் கமிஷன் கட்டணம் நிர்ணயித்துள்ளது. வேட்பாளர் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தும் பொருட்களுக்கு தேர்தல் கமிஷன் இந்த அடிப்படையில்தான் செலவு செய்ததாக கணக்கு எழுதும். சுயேச்சை வேட்பாளர்கள் இதனை பொருட்படுத்துவதில்லை. ஆனால் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது பரிசுப் பொருளைக் கூட கையில் தொட மறுத்து விடுகின்றனர்.