| ADDED : நவ 22, 2025 12:13 AM
மதுரை: மதுரை பை பாஸ் ரோடு துரைசாமி நகர், நமச்சிவாய நகரில் பலரும் தங்கள் கார்களை, ரோட்டோரத்தில் நிறுத்தி வருகின்றனர். இந்நகரின் 4-வது தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான நவீன்சந்தர், 39, என்பவர், ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த தன் காரில் இருந்த பொருட்களை எடுக்க, நேற்று காலை சென்றபோது அதிர்ச்சியடைந்தார். காரில் இடதுபுறத்தில் இருந்த இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டிருந்தன. கார் ஒருபுறம் சாயாமல் இருக்க செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், அதே பகுதியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் காரின் வலதுபுறம் இருந்த 2 சக்கரங்கள் கழற்றப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், ஆம்னி வேனின் நம்பர் பிளேட்களை திருடி சென்றுள்ளனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், டூ - வீலரில் வந்த இருவர் இச்செயலில் ஈடுபட்டது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.