மதுரை: ஈரோடு பிரசார கூட்டத்தில் 'களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது' என்று அ.தி.மு.க.,வை மறைமுகமாக விமர்சித்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு பதிலடியாக, 'தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும்தான் எப்போதுமே போட்டி. தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே கட்சி நாங்கதான்' என அ.தி.மு.க.,வினர் கொதிப்படைந்துள்ளனர். ஈரோட்டில் நேற்றுமுன்தினம் விஜய் பங்கேற்ற 'மக்கள் சந்திப்பு' பிரசார கூட்டம் நடந்தது. இதுவரை நடந்த கூட்டங்களில் தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும்தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வும் சேர உள்ளதால் அவர் அ.தி.மு.க.,வை விமர்சிக்க தயங்குகிறார் என பேசப்பட்ட நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், விஜயும் 'கூட்டணி இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்தனர். 'புரட்சி தளபதி' இதன் பிறகு காட்சிகள் மாறின. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்தார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி தமிழன் வரிசையில் விஜய்க்கு 'புரட்சி தளபதி' என (ஏற்கனவே நடிகர் விஷாலுக்கு இயக்கும் பெயர்), புதிதாக செங்கோட்டையன் சூட்டினார். ஈரோடு கூட்டத்தில் பேசிய விஜய், அ.தி.மு.க.,வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் 'களத்தில் இருப்பவர்களை (தி.மு.க.,வினரை) மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும். களத்தில் இல்லாதவர்களையும் களத்துக்கு சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்க முடியாது. தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும்தான் போட்டி' என்றார். இது அ.தி.மு.க., வினரை கொதிப்படைய செய்துள்ளது. விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க., சாதனைகளையும், தொண்டர்களின் பலத்தையும் குறிப்பிட்டு அவர்கள் பதிலடி கூறி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., 54ம்ஆண்டில் வெற்றிகரமாக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது அ.தி.மு.க.,தான். தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் நுாற்றுக்கணக்கான பூத்கள் வீதம் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளை அமைத்துள்ளது. அடுத்து தி.மு.க., அதை செய்து வருகிறது. ஆனால் நேற்று முளைத்த த.வெ.க., தனது கட்சி சார்பாக பூத் ஆலோசனை கூட்டம் நடத்தி பெயரளவில் கமிட்டி அமைத்ததோடு சரி.கரூரில் 41 பேர் பலியானதற்கு காரணமான விஜய், அ.தி.மு.க.,வை நேரடியாகவோ, மறைமுகமாவோ விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. மக்களின் முதல்வராக இருந்த காரணத்தால்தான் பழனிசாமி முதல் ஆளாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மக்கள் நிராகரிப்பர் மதுரையில் நடந்த அ.தி.மு.க., மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. அதுபோல் பழனிசாமி 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற சூளூரையுடன் தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போதும் அசம்பாவிதம் இல்லை. அந்தளவுக்கு கட்டுக்கோப்பான கட்சி அ.தி.மு.க., நேற்று கட்சி துவக்கி இன்று ஆட்சிக்கு வர துடிக்கும் த.வெ.க.,வையும், சினிமா டயலாக் பேசி வரும் விஜய்யையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கிய போது தி.மு.க.,வை 'தீய சக்தி' என்று சொன்னார். அவரை தொடர்ந்து ஜெயலலிதாவும் கூறினார். தீயசக்தியை எதிர்த்து பழனிசாமியும் தொடர்ந்து போராடி வருகிறார். இன்று அதையே சொல்லி அ.தி.மு.க., இடத்தை பிடித்து விடலாம் என விஜய் நினைத்தால் மக்கள் அவரை நிராகரிப்பார்கள். தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.,தான். இவ்வாறு கூறினர்.