உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பல் மருத்துவ சிகிச்சையும் முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தில் சேருமா

 பல் மருத்துவ சிகிச்சையும் முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தில் சேருமா

மதுரை: தெற்றுப்பல் சரிசெய்வது உட்பட பல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அதிகம் செலவாகும் நிலையில் முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அவசியமாக மாறி விட்ட இந்த காலத்தில் பல் மருத்துவ சிகிச்சையை மட்டும் எந்த காப்பீட்டு நிறுவனமும் இந்தியாவில் சேர்க்கவில்லை. மத்திய அரசின் தேசிய சுகாதார கொள்கையில் பட்ஜெட் ஒதுக்கி முன்னேற்பாடு செய்யாததும் ஒரு காரணம். மூன்று வேளை உணவை மென்று தின்பதற்கு பற்கள் தான் அவசியம். பற்கள் அழகு சம்பந்தப்பட்டது என கருதி 'காஸ்மெடிக்' சிகிச்சையில் சேர்த்ததே தவறு என்கின்றனர் அகில இந்திய பல்மருத்துவ சங்க மாநில நிர்வாகிகளான டாக்டர்கள் செந்தாமரைக்கண்ணன், கண்ணபெருமான். மதுரையில் அவர்கள் கூறியதாவது: முன் வரிசை பற்கள் பழுப்பு நிறமாகவோ, உடைந்திருந்தாலோ, இடைவெளி இருந்தாலோ, பல் சீரான வரிசை இன்றி இருந்தாலோ, அதை சரிசெய்வது தான் 'காஸ்மெடிக்' எனும் அழகு சிகிச்சை. பற்களின் உள்பக்கம் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை 'காஸ்மெடிக்' சிகிச்சையின் கீழ் சேர்க்கக்கூடாது. அமெரிக்காவில் லட்சக்கணக்கானோரிடம் நடத்திய ஆய்வின் படி உடல் எடை, உயரம், பற்கள், தலைமுடி இந்த நான்கும் தான் மற்றவர்களால் எளிதாக கேலிக்கு உள்ளாகிறது. முன்பற்கள் எடுப்பாக (தெற்றுப்பல்) இருப்பது குழந்தைகளின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவாகும். செலவு செய்ய முடியாத குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கேலிக்குள்ளாவர். விருதுநகரில் 2024 ல் அப்போதைய கலெக்டர் ஜெயசீலன் ஏற்பாட்டில், முன்பற்கள் எடுப்பாகத் தெரிந்த 300 குழந்தைகளுக்கு இரண்டாண்டு சிகிச்சை இலவசமாக அளித்தோம். அரசு மருத்துவமனைகளில் கூட இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்படவில்லை. முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையை சேர்க்க வேண்டுமென சுகாதார செயலரிடம் தெரிவித்துள்ளோம். பெண்களுக்கு பாதிப்பு புகையிலை பொருட்கள் பயன்படுத்தாதவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பற்கள் பராமரிப்பு இல்லாததால் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டு இறக்கின்றனர். வாய்ப்பகுதி சுகாதாரம் இல்லாததே காரணம். பல் சரியாக இல்லாவிட்டால் நிறைய பேருக்கு சாப்பிடுவதே சிரமமாக இருக்கிறது. எனவே பல் சிகிச்சையை அழகு சிகிச்சையாக பார்க்க முடியாது. பற்களுக்கான சிகிச்சை அதிகம் செலவு பிடிக்கும் என்பதால் மத்திய அரசின் தேசிய சுகாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்கு முன்பாக, முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பற்கள் பராமரிப்பையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை