உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மயிலாடுதுறையில் சிறுத்தை உலா பிடிக்கும் முயற்சியில் வனத்துறை

மயிலாடுதுறையில் சிறுத்தை உலா பிடிக்கும் முயற்சியில் வனத்துறை

மயிலாடுதுறை:மயிலாடுதுறை, கூறை நாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வனத்துறையினர் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.நேற்று முன்தினம் காலை மாவட்ட வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் கூறைநாடு, பூக்கடை தெரு, சார தட்டை தெரு, செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெரு பகுதிகளில் காடுகள் மண்டி கிடக்கும் காலி மனை மற்றும் பழங்காவேரி பகுதிகளில் வலைகளை கட்டி தேடும் பணியில் ஈடுபட்டனர்.சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆரோக்கியநாதபுரத்தை சிறுத்தை கடந்து சென்றதை, நெல் அறுவடை இயந்திர டிரைவர் பார்த்துள்ளார். நேற்று காலை திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் ஆகியோர் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் ஆய்வு செய்தபோது, சிறுத்தை கால் தடயங்கள் உறுதியானது.நேற்று முன்தினம் இரவு, 3 கி.மீ. தொலைவிற்கு சிறுத்தை இடம் பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் கூறியதாவது:கால் தடத்தை பார்த்தால் 7 - 8 வயது சிறுத்தையாக இருக்கும். இந்த வயது சிறுத்தைகள் மனிதர்களை கண்டால் விலகி செல்லும். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். ஆரோக்கியநாதபுரத்தில் இரவில் வெளியில் யாரும் துாங்க வேண்டாம். பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் சிறுத்தை நடமாட்டம் இருக்காது. இரவில் தான் நடமாட்டம் இருக்கும். செயற்கைகோள் வாயிலாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

சிறுத்தை நடமாட்டத்தால், கடந்த 3ம் தேதி முதல் ஏழு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற பள்ளிகளுக்கு வன காவல் துறையினர் பாதுகாப்புடன், மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற மெட்ரிக் பள்ளிகளுக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் ௯ பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை