ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பிரச்னைக்குரிய இடத்தில் விடுமுறை நாளான நேற்று, 10 பொக்லைன் இயந்திரங்கள், 22 டிராக்டர்கள் என, 32 வாகனங்களில் மண் அள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.ராசிபுரம் யூனியன், போடிநாயக்கன்பட்டி பஞ்., ஓணாங்கரடு பகுதியில் ஈச்சங்குட்டை உள்ளது. இந்த குட்டையை ஒட்டி-யுள்ள, 2.5 ஏக்கர் நிலத்தில், விவசாயி குழந்தைவேல், 79, என்-பவர், கடந்த, 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குழந்தைவேலின் விவசாய நிலம் குட்டைக்கு சேர்ந்தது என, பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், ஓடை, குட்டை, ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அள்ளிக்கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்தது. இதை பயன்படுத்திக்கொண்ட உள்ளூர்வாசிகள், ஈச்சங்குட்டையில் மண் அள்ள அனுமதி பெற்றனர். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் குழந்தைவேலின் விவசாய நிலத்தில் இருந்து, விடு-முறை தினமான நேற்று, 10 பொக்லைன் இயந்திரம், 22 டிராக்-டர்கள் என, 32 வாகனங்களை பயன்படுத்தி, காலை முதல் மண் வெட்டி அள்ளிச்சென்றனர். சில இடங்களில் வண்டல்மண், செம்மன், கிராவல் மண் என, 4 அடிக்கு அதிகமாகவும் வெட்டி மண்ணை அள்ளிச்சென்றனர். மேலும், குழந்தைவேலு, சில தினங்களுக்கு முன் மக்காச்சோளம் விதைத்து நீர் பாய்ச்சிய இடத்திலும் அவசர அவசரமாக மண் வெட்டி அள்ளிச்சென்றனர். இதை தடுத்த குழந்தைவேலுவை மிரட்டி அனுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி, 7 வண்டிகளுக்கு பர்மிட் வாங்கிவிட்டு, 32 வண்டிகளில் மண் அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, ராசிபுரம் தாசில்தார் சரவணனிடம் கேட்டபோது, ''ஈச்சங்குட்டையில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இடம்? எவ்வளவு என்று? வி.ஏ.ஓ., தான் குறிப்-பிட வேண்டும். குறைவான வண்டிகளில் மண் அள்ளிச்செல்ல மட்டும் தான் கூறினேன்,'' என்றார்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: காலை முதலே அவசர அவசரமாக மண் வெட்டிச் சென்றனர். வெட்டிய மண்ணை அருகே உள்ள நெடுஞ்சாலையை ஒட்டிய இடங்களில் கொட்டி வருகின்றனர். ஏரி வண்டல் மண்னை, விவ-சாய பயன்பாட்டிற்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையோரம் வணிக கட்டடங்கள் கட்டும் நோக்கில் இந்த மண்ணை கொட்டி வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.