| ADDED : ஜூலை 20, 2024 02:41 AM
நாமக்கல்:'தமிழக அரசு போக்குவரத்துக்கழக வழித்தடத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும்' என, நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.,) சங்கம் சார்பில், நிர்வாக குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகராஜ் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், தமிழக அரசு போக்குவரத்துக்கழக வழித்தடத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ., பஞ்சப்படி உயர்வை உடனே வழங்குவதுடன், வழங்காமல் உள்ள பண பலன்களை வழங்க வேண்டும். போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தை காட்டி சீரழிவுக்கு கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும்.தற்போது, பல வழித்தடங்களில் நிர்வாகம் தன்னிச்சையாக நடத்துனர் இல்லாமல் பஸ்சை இயக்குவதை கைவிட வேண்டும். பொதுமக்கள் பாதிக்கின்ற வகையில் பல வழித்தடத்தில் பஸ்கள் இயக்காமல் தனியாருக்கு சாதகமாக இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 2023 ஏப்., 1க்கு பின் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.