உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றுக்கு அருகே முன்னோருக்கு தர்ப்பணம்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றுக்கு அருகே முன்னோருக்கு தர்ப்பணம்

நாமக்கல், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புனித நீராட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆடி அமாவாசையான நேற்று, ஏராளமான பொதுமக்கள், ஆற்றுக்கு அருகில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் வகையில் செய்யப்படும் இந்த தர்ப்பணம் நிகழ்ச்சி மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும், ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள், நீர்நிலை பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பர். அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று, ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில், பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்கிடையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரங்களில், புனித நீராடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனால், ஆடிப்பெருக்கான, நேற்று முன்தினம், பொதுமக்கள், புதுமண தம்பதியர், காவிரி ஆற்றில் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள், காவிரி ஆற்றின் அருகே ஆங்காங்கே அமர்ந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நேற்று அதிகாலை முதல், குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்கள், வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், பச்சரிசி, காய்கள், கீரைகள், மளிகை சமான்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, குடும்பத்தில் இறந்து போன முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி மாவில் உருண்டை பிடித்து, முன்னோர்களை வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.அதில், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், மல்லுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்பட்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை