| ADDED : நவ 21, 2025 03:00 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில், ஜவஹர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தில் நடக்கும் கலை வகுப்புகளில், மலைவாழ் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும், ஜவஹர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் சார்பில், வல்வில் ஓரி கலையரங்கத்தில் வாரம்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் கலை வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று சிலம்பம், கராத்தே, யோகா, கிராமிய நடனம், பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கைவினை உள்ளிட்ட பல்வேறு நுண்கலை பயிற்சிகளை கற்று வருகின்றனர்.இதுகுறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அறிமுக வகுப்புகள், குழந்தைகளின் கலைத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து குடியரசு தலைவர் விருது முகாமுக்கு அனுப்பப்படுவர் என, திட்ட அலுவலர் பிரவீன் கூறினார்.