| ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
ராசிபுரம்: மாணவியின் மருத்துவ செலவுக்காக, ஞானமணி கல்வி நிறுவனம் சார்பில், 20 ஆயிரம் ரூபாய்க்கான 'டிடி' வழங்கப்பட்டது. ஈரோடு, தாமரை மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருபவர் மாணவி ராகவி. அவர், தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இம்மாணவியின் பெற்றோருக்கு வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மகளின் சிகிச்சை செலவுக்காக பல்வேறு அமைப்புகளிடம் நிதியுதவி கேட்டு போராடி வருகின்றனர். அதை அறிந்த ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனம், மாணவியின் மருத்துவ செலவுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்தனர். அதன்படி, கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலாலீனா ஆகியோர் மாணவி ராகவியின் மருத்துவ சிகிச்சைக்காக, 20 ஆயிரம் ரூபாய்க்கான 'டிடி'யை அம்மாணவியின் தந்தை ரகுநாத்திடம் வழங்கினர். நிதி உதவியை பெற்றுக்கொண்ட மாணவி ராகவியின் தந்தை ரகுநாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ஞானமணி கல்வி நிறுவனத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.