நாமக்கல்,'தமிழகத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, டிச., 29 முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்த போராட்டம் நடைபெறும்' என, நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல்லில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கால்நடை தீவனத்திற்கான மூலப்பொருட்களின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளதால், 1 லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 65 ரூபாய் செலவாகிறது. ஆவின் கூட்டுறவு நிறுவனம், 1 லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், 1 லிட்டர் பாலுக்கு, மாநில அரசு, 6 ரூபாய் மானியம் வழங்குகிறது. தமிழக அரசு, 3 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.எனவே, தமிழக அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதி களை அழைத்து பேசி, 1 லிட்டர் பாலுக்கு, 15 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். வரும் டிச., 28ம் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால், டிச., 29 காலை முதல், தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, மாநில அளவில் ஆவின் நிறுவனத்திற்கு பால் நிறுத்த போராட்டம் நடைபெறும். ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அனுமந்தராசு உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.