சேந்தமங்கலம்: கொல்லிமலை எடப்புளி நாடு பஞ்., ஊர்புறம் பகுதியில், நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. அட்மா குழு தலைவர் செந்தில்முருகன், கலெக்டர் உமா ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், சின்ராஜ், எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்று, கொல்லிமலை யூனியனுக்குட்பட்ட, 14 பஞ்.,களில் இருந்து, 1,047 பயனாளிகளுக்கு, 2.65 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அலைபேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, கலெக்டர் பேசியதாவது:கொல்லிமலைக்கு விரைவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடு, வீடாக சென்று சிறு நோய் சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் முதியோர் வாகனம் திட்டம் கொண்டு வரப்படும். மேலும், கொல்லிமலையில் அதிகளவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அதற்கான பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாகரன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா, தாசில்தார் அப்பன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.