ராசிபுரம்: ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள துாய லூர்து அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:00 மணியளவில் தேவாலய அருட்தந்தை ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.* ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன், கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமகிரிப்பேட்டை மாரியம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது.* சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.* திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் மரகதலிங்க தரிசனத்தை காண ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆபத்து காத்த விநாயகர் கோவில், கைலாசநாதர் ஆலயம், பத்ரகாளியம்மன் கோவில், ஆறுமுகசாமி கோவில், மலைக்காவலர் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள ஹேரம்ப பஞ்சமுக விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பேட்டை மாரியம்மன், பகவதி அம்மன், நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன், பரமத்தியில் உள்ள அங்காளம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.* மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை புதுார் புடவைக்காரியம்மன், வீரகாரன் சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.