மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டியில் பாறைகள் உடைத்து வீதிமீறி நடக்கும் கட்டட பணியை நிறுத்த தவறிய கலெக்டரை கண்டித்து, முன்னாள் கூடுதல் தலைமை செயலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி- கோடப்பமந்து சாலையோரத்தில் தனியார் சார்பில் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது. அங்கு, பாறை உள்ள இடத்தை சுற்றி 'தார்பாலின்' போடப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டு வருகிறது. அதே பகுதியில் ஆழ்துளை கிணறும் அமைக்கும் பணிகளும் நடந்துள்ளது. கண்டனம் தெரிவித்து தர்ணா
இங்கு நடந்து வரும் விதிமீறல்கள் குறித்து, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான, முன்னாள் கூடுதல் தலைமை செயலர் சுர்ஜித் சவுத்ரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் தெரிவித்துள்ளார். கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை சுர்ஜித் சவுத்ரி தலைமையில், கூட்டமைப்பின் உறுப்பினர் அருண், ஜனார்த்தனன் ஆகியோர் கலெக்டரை சந்தித்து புகார் குறித்து கேட்க வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால், கண்டனம் தெரிவித்து அலுவலக வளாகத்தில் அனைவரும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரிடம் வாக்குவாதம்
அப்போது அங்கு வந்த, டவுன் டி.எஸ்.பி., யசோதா, இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், மீனா பிரியா ஆகியோர் சுர்ஜித் சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர், 'கலெக்டரை பார்க்க வேண்டும்,' என, தெரிவித்து போராட்டத்தை கைவிட மறுத்து அங்கேயே அமர்ந்தார். தொடர்ந்து, கட்டட விதிமீறல் நடந்த சம்பவ பகுதிக்கு, போலீசாரை அழைத்து சென்று காண்பித்தார்.அங்கு, சுர்ஜித் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில்,''ஐகோர்ட் உத்தரவுப்படி, நீலகிரியில் பாறைகள் உடைக்க அனுமதி இல்லை. விதிகளை மதிக்காமல் கோடப்பமந்து பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் விதிமீறலுக்கு துணைபோகாமல், கோர்ட் உத்தரவை மதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நீலகிரி கலெக்டர் கூறுகையில்,''அங்கு நடக்கும் கட்டட பணிக்கான அனுமதி எந்த ஆண்டில் வாங்கினர் என்பது குறித்து எனக்கு தெரியாது. புவியியல் துறையினர் ஆய்வுக்கு பின், கம்பரேஷர் உதவியுடன் பாறைகளை அகற்ற, ஒரு வாரம் அனுமதி கொடுக்கப்பட்டது. அங்கு வெடி வைத்து பாறைகள் அகற்றப்படுவது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறி போர்வெல் அமைத்திருந்தால் அகற்ற உத்தரவிடுகிறேன். அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
03-Oct-2025