| ADDED : ஆக 06, 2024 09:48 PM
ஊட்டி : ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பகுதியில், உணவு கழிவுகளை கொண்டு எரிவாயு தயார் செய்யும் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.ஊட்டி பிங்கர்போஸ்ட், பட் பயர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:ஊட்டி நகராட்சி, 8 வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான பாலிடெக்னிக் பட்பயர் சாலைக்கு அருகில் உள்ள இடத்தில், ஓட்டல்களில் மீதமாகும் உணவுக் கழிவுகளை சேகரித்து அதில் எரிவாயு உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மருத்துவக் கல்லுாரி மற்றும் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் கால்நடைகள் உள்ளன.இந்த பகுதியில் எரிவாயு தயார் செய்யும்போது துர்நாற்றம் வீசி சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ சிரமம் ஏற்படும். ஏற்கனவே, குன்னுார் மற்றும் காந்தள் பகுதியில் இந்த பணி நடக்கும் போது, மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு பல போராட்டங்களுக்கு பிறகு இந்த பணி கைவிடப்பட்டுள்ளது.எனவே, இந்த பகுதியில் உணவு கழிவுகளை கொண்டு எரிவாயு உற்பத்தி செய்யும் கூடாரத்தை வேறு இடத்தில் அமைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.