| ADDED : ஏப் 17, 2024 01:57 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே, கேரள மாநில எல்லையோர வனப்பகுதிகளில், நக்சல் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தமிழக எல்லையோர வனப்பகுதிகளை ஒட்டி சில ஓட்டுச்சாவடி மையங்கள் அமைந்து உள்ளன. அதில், பந்தலுார் அருகே சேரம்பாடி கண்ணம்வயல், மண்ணாத்திவயல், காவயல் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்கள் நக்சல் அச்சுறுத்தல் உள்ள மையங்களாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மையங்களை ஒட்டி வனப்பகுதிகள் மற்றும் பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், அதிரடிப்படையினர் மற்றும் நக்கல் தடுப்பு பிரிவு போலீசார் அவ்வப்போது, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.வரும், 19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடமாடி வரும் நச்சல்கள் வனப்பகுதி வழியாக, தமிழக எல்லைக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சல் அச்சுறுத்தல் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தல் முடியும் வரை துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று, கண்ணம்வயல் மற்றும் கேரளா மாநிலம் கட்டக்குண்டுதோடு மலை வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். போலீசார் கிராம மக்களிடம் கூறுகையில், 'ஓட்டுச்சாவடி மையங்களை ஒட்டிய வனப்பகுதி மற்றும் கிராமங்களில் சந்தேகப்படும் வகையில், யாரேனும் நடமாடினால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.