இரண்டாவது சீசனுக்கு தயாராகும் நேரு பூங்கா
கோத்தகிரி;கோத்தகிரி நேரு பூங்காவை, இரண்டாவது சீசனுக்கு தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொழுது போக்குவதற்கு சிறந்த பூங்காவாக திகழ்கிறது.இங்கு, மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருந்த நிலையில், நடப்பாண்டு கண்காட்சி நடத்தப்படவில்லை.தற்போது, இரண்டாவது சீசனுக்காக பூங்காவை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், பூங்கா புல் தரை பசுமையாக காட்சியளிக்கிறது. புல் தரையை நேர்த்தியாக வெட்டி சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பல்வேறு வண்ணங்களில், ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மலர் நாற்றுகள் நடவுப்பணி, எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இரண்டாவது சீசனுக்குள், பூங்காவை பொலிவு படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.