| ADDED : ஜூலை 06, 2024 01:42 AM
ஊட்டி;ஊட்டியில் நடந்த வங்கியாளர்கள் கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை, கூடுதல் கலெக்டர் கவுசிக் வெளியிட்டார்.அதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில், 3,727.83 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் வங்கிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, மகளிர் குழுக்களுக்கும் வணிக ரீதியான கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்காக, ஆண்டுதோறும் வங்கிகள் கணக்கு இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம். இந்த நடப்பு ஆண்டில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம், 3,727.83 கோடி ரூபாய் கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க, 3,091.48 கோடி ரூபாய்; குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு, 438.61 கோடி, பிற முன்னுரிமை கடன்களுக்கு, 197.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நபார்டு உதவி பொது மேலாளர் திருமலை ராவ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திலகவதி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த் காலகி உட்பட, வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.