ஊட்டி:ஊட்டியில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிடுகிறார். நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்ய, காலை, 7:00 மணிக்கு கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் வேட்பாளர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட கட்சியினர் காணிக்கை செலுத்தினர். பின், 12:00 மணி அளவில் ஊட்டி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் முருகனுக்கு மேளம், தாளம் முழங்க ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து. ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து கேசினோ சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். வழி நெடுக திரண்டிருந்த பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள், 'மீண்டும் மோடி; வேண்டும் மோடி' என, கைகளை துாக்கி காட்டி உற்சாகப்படுத்தினர். நண்பகல், 12:40 மணிக்கு தேர்தல் அதிகாரியிடம் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். போலீசார் தடியடி
வேட்பு மனு தாக்கல் செய்ய பா.ஜ., தொண்டர்கள் காபிஹவுஸ் பகுதியிலிருந்து, கேசினோ சந்திப்பு, பிரீக்ஸ் பள்ளி சாலை வழியாக ஸ்பென்ஷர் சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, அ.தி.மு.க.,வும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அங்கு, இரு கட்சிகளுக்கு இடையே கூட்ட நெரிசலால் 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. அங்கு வந்த, நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். அதில், பா.ஜ., தொண்டர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர் சாலையோரத்தில் இருந்த குழியில் விழுந்து காயமடைந்தனர். விரைந்து வந்த அண்ணாமலை, முருகன்
இந்த சம்பவத்தை கேள்வி பட்டு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சரும், வேட்பாளருமான முருகன், பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் அங்கு வந்தனர். 'எஸ்.பி.,யை 'சஸ்பெண்ட்' செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்,' என்று, ஸ்பென்ஷர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., மா.செ.. கோபம்
மறுபுறம், அ.தி.மு.க.,வின் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர். அப்போது, 'ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தும் கூட அதிகாரிகள் காத்திருக்க வைக்கின்றனர்,' என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் கலெக்டர் அலுவலகத்தில் சப்தம் போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தடியடி சம்பவம்மன்னிப்பு கேட்ட எஸ்.பி...!
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:பா.ஜ., கட்சியை பொறுத்த வரை கட்டுக்கோப்பான கட்சி வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரியிடம், 12:15 முதல் 1:15 வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திற்குள் பணிகளை முடித்து வெளியே வந்து விட்டோம். எதிர் கட்சி வேட்பாளர்களால் அந்தளவுக்கு தொண்டர்களை கொண்டு வர முடியவில்லை. போலீசாரிடம், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டனர். பா.ஜ., தொண்டர்கள் அதிகளவில் இருந்ததை பார்த்த போலீசார் தேவையில்லாமல் தடியடி நடத்தியுள்ளனர். அதில், 4 தொண்டர்கள் காயம்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 தொண்டர்கள் முதலுதவி சிகிச்சை எடுத்து சென்றுள்ளனர்.ஜனநாயக நாட்டில் வேட்பு மனு தாக்கலின் போது நடக்க கூடாத சம்பவம் நடந்துள்ளது. போலீசார் ஜனநாயகத்துடன் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கலாம். மாவட்ட எஸ்.பி., களத்தில் இறங்கி தடியடி நடத்தியுள்ளார். அதிருப்தியடைந்த பா.ஜ., தொண்டர்கள் போலீசாரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ஜ., வை பொறுத்த வரை போலீசாரே தவறு செய்தாலும் கூட போலீசார் தவறு செய்தார்கள் என்று சொல்ல கூடிய கட்சி நாங்கள் அல்ல. போலீசாரின் கண்ணியத்தை நாங்கள் தான் காப்பாற்றி கொண்டிருக்கிறோம். இச்சம்பவத்தில், மாவட்ட எஸ்.பி., மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து, 'வேண்டுமென்றே செய்யவில்லை; எங்களுக்கு வேறு வழியில்லை; தவறுதலாக நினைத்திருந்தால் மன்னித்து விடுங்கள்,' என, கேட்டனர்.'போலீசாரை களங்கப்படுத்த கூடாது,' என்ற நோக்கில் நாங்கள் கலைந்து சென்று விட்டோம். சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை பா.ஜ., செய்யும். அதே வேளையில் தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., மற்றும் தடியடியில் காயமடைந்தவர்கள் சார்பில், நீலகிரி எஸ்.பி., மீது புகார் அளிக்கப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.