பழைய பென்சன் திட்டம் வேண்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
பெ.நா.பாளையம்;தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், பெரியநாயக்கன்பாளையம் கிளை சார்பில் பேரவை கூட்டம் நடந்தது.இதில், தேர்தல் அறிக்கையில், உறுதி அளித்தபடி புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம், 80 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 20 சதவீதம், 85 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 30 சதவீதமும் அமலில் உள்ள ஆணைகளின்படி, 90, 95, 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில், செலவழித்த தொகையை திரும்பப் பெறுவதற்கான மனுக்கள் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் நிலுவையில் உள்ளன. இப்பிரச்னையில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, நிலுவையில் உள்ள தொகையை விடுவிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை, கிழக்கு புறவழிச்சாலை ஆகியவற்றை இணைத்து ரிங் ரோடு அமைத்து, கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவை மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலை வீரபாண்டி, புதுப்பாளையம் ஆகிய இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.கோவை ரயில் நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல சாலையை கடப்பதில் பெரும் சிரமம் உள்ளது. இங்கு சுரங்க நடைபாதை அல்லது உயர் மட்ட நடைபாதை அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் பலராமன், வட்ட கிளை தலைவர் மயில்சாமி, செயலாளர் பேராசிரியர் வேலுசாமி, துணை செயலாளர் வீரலட்சுமி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கிளை தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.