| ADDED : மே 01, 2024 10:51 PM
குன்னுார் : குன்னுாரில் இருந்து மஞ்ச கம்பைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்சின் படி திடீரென உடைந்த போது, பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.குன்னுார் கைகாட்டி அருகே உள்ள மஞ்சக்கம்பை நாகராஜர் கோவில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் வசதிக்காக, நேற்று ஊட்டி, குன்னுார் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.அதில், குன்னுாரில் இருந்து நேற்று காலை, 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மஞ்சக்கம்பை நோக்கி சிறப்பு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.பல பயணிகள் தொங்கியபடி சிரமத்துடன் சென்றனர். பஸ், கோடேரி அருகே 'ஸ்பீட் பிரேக்கரில்' ஏறிய போது திடீரென பஸ்சின் படி உடைந்தது. அதில் தொங்கிய படி சென்ற பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக பஸ்சை நிறுத்தி உடைந்த படியை எடுத்த கண்டக்டர் பஸ்சிற்குள் கொண்டு சென்றார். மீண்டும் விபத்து அபாயத்தில் பயணிகள் தொங்கியபடி சென்றனர்.லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''தமிழகத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் காலாவதியாக உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை செயலர் பனீந்தர ரெட்டி, சென்னையில் ஆய்வு செய்து பழைய பஸ்கள் தொடர்பாக, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.இது போன்று, நீலகிரியிலும் பழைய பஸ்கள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்ய வேண்டும். ஏற்கனவே, ஐகோர்ட் உத்தரவை மீறி 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து கழகம், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் பழைய பஸ்கள் இயக்கி இது போன்ற பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.