காட்டு யானையை வனத்துக்குள் ஓட்டிய தெரு நாயால் ஆச்சரியம்
கூடலூர்:தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையை, தெருநாய் துரத்தியதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனப்பகுதியில் இருந்து, காட்டு யானைகள் கூடலுார் தொரப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தன.இதை தடுக்க வனத்துறையினர் முதுமலை வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். ஆனாலும், சில யானைகள் அகழியை கடந்து, இரவில் ஊருக்குள் நுழைந்து, காலையில் முதுமலை வனத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும் தடுக்க முடியவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை, காலையில் மைசூரு சாலையில் நுழைந்து முதுமலை நோக்கி சென்றது.இதை பார்த்த தெரு நாய் பின் தொடர்ந்து விரட்டியது. யானை அச்சத்துடன் சாலையில் ஆக்ரோஷமாக ஓடி, தொரப்பள்ளி வன சோதனையை கடந்து முதுமலைக்குள் சென்றது. யானையை தெருநாய் விரட்டி சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.