பசுவை அடித்து கொன்ற சிறுத்தை; வனத்துறையினர் விசாரணை
குன்னுார் : குன்னுார் ஆரஞ்ச் குரோவ் பகுதியில் பசுவை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குன்னுார் அருகே வனப்பகுதிகளில் இருந்து உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது. இவை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நாய்கள், ஆடுகளை கொன்று உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், நேற்று காலை குன்னுார் ஜிம்கானா அருகே ஆரஞ்ச்குரோவ் பகுதியில் நாகராஜ் என்பவரின் வளர்ப்பு பசு மாட்டை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. அவ்வழியாக வந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனச்சரகர் ரவீந்திர நாத் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உரிமையாளர் மூலம் புதைக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'பசுவின் உரிமையாளருக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; பொது மக்கள் இப்பகுதியில் முன்னெச்சரிகையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.