மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
23 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மனநல காப்பகத்திற்கு 'சீல்' வைத்த அதிகாரிகள், 13 பேரை மீட்டு கோவைக்கு அழைத்து சென்றனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் கடந்த, 1999 ஆம் ஆண்டு டிச., 27ஆம் தேதி, அகஸ்டின் என்பவர் 'லவ்ஷோர்' எனும் காப்பகத்தை துவங்கினார். இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆலோசனை படி, காப்பகத்தில் தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக, கடந்த, 2019ம் ஆண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கேட்டனர். அதில், 'அலோபதி மருந்துகளுடன், காப்பக உரிமையாளர் அகஸ்டியன் சித்த வைத்தியமும் செய்து வந்துள்ளார்' என, தெரியவந்தது. அப்போது, இந்த காப்பத்தில், 60- பேர் தங்கி இருந்து உள்ளனர். கடந்த மாதம் மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு சென்றபோது, 23 பேர் தங்கி இருந்த நிலையில், 'இந்த காப்பகம் முறைகேடாக செயல்பட்டு வருகிறது' என, மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. தொடர்ந்து, கூடலுார் ஆர்.டி.ஓ., செல்வகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கதுரை, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பல அதிகாரிகள் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 'இந்த மனநல காப்பகம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், முறைகேடாக செயல்பட்டு வந்ததும், காப்பகத்தில் தங்கி இருந்தவர்கள் எந்த விதமான வசதிகளும் இன்றி சிரமப்பட்டு வந்தனர்' என்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து, தங்க வைக்கப்பட்டிருந்த, 9- ஆண்கள், 4- பெண்கள் என மொத்தம் 13 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள இரண்டு மனநல காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பணியாற்றி வந்த சிறுவன் மற்றும் பெண் இருவரும், ஊட்டியில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். கட்டடம் 'சீல்' வைக்கப்பட்டு தலை மறைவான காப்பத்தின் உரிமையாளர் அகஸ்டின் மீது நெலக்கோட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.கூடலுார் ஆர்.டி.ஓ., செல்வகுமார் கூறுகையில், ''இங்கு அனுமதி இன்றி செயல்பட்ட மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். காப்பகத்தில் இதுவரை தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் பதிவு செய்து வைக்கப்படவில்லை. இந்த காப்பகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. காப்பகத்தில் தங்கியிருந்து உயிரிழந்தவர்கள் காப்பகத்தை ஒட்டிய சதுப்பு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
23 hour(s) ago