உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / களை கட்டுது நெல் விவசாயம்! மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

களை கட்டுது நெல் விவசாயம்! மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலுார் : கூடலுாரில் குறித்த நேரத்தில் பருவமழை துவங்கி பெய்து வருவதால், விவசாயிகள் மீண்டும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலூரில் வயல் நிலங்களில் கோடையில் காய்கறி விவசாயமும், பருவமழை காலத்தில் நெல் விவசாயமும் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, குறித்த நேரத்தில், எதிர்பார்த்த பருவமழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள், நெல் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். மாற்றாக, நேந்திரன் வாழை, இஞ்சி போன்ற பயிர்களுக்கு மாறினர். நெல் விவசாயத்தின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது.இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் மாதம் சரியான நேரத்தில் துவங்கிய பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், சரியான நேரத்தில் விதைநெல் விதைத்தனர்.தொடர்ந்து, டிராக்டர் வாயிலாக வயல்களில் உழவுப் பணிகள் மேற்கொண்டு, ஆடி மாதத்தில் நெல் நாற்றுக்களை பறித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயி நாராயணன் கூறுகையில், ''பல ஆண்டுகளுக்கு பின் நடப்பு ஆண்டு, குறித்த நேரத்தில் பருவமழை துவங்கி பெய்து வருவதால், சில ஆண்டுகளுக்கு முன் நெல் விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள், மீண்டும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அறுவடையின்போது, யானைகளால் நெல் பயிர்கள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. வனத்துறையினர் முன்னெச்சரிக்கை எடுத்து, இதை தடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை