ஊட்டி: ஊட்டி என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தில் உருளை கிழங்கு விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து கூடுதல் லாபம் ஈட்டி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, கோத்தகிரி, குந்தா, குன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் உருளை கிழங்கு பயிரிடப்படுகிறது. அறுவடைக்கு பின், மேட்டுப்பாளையத்தில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம் மற்றும் பிற மண்டிகளுக்கு கிழங்கை விவசாயிகள் விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும் உருளை கிழங்கிற்கு நல்ல ருசி இருப்பதால் தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இடைதரகர்கள் இன்றி விற்பனை
மேலும், நீலகிரியில் பல்வேறு பகுதியில் அறுவடை செய்யப்படும் உருளை கிழங்கை மேட்டுப்பாளையத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம் அல்லது தனியார் மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். அதில், என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தில் இடைதரகர்கள் இன்றி விற்பனை நடப்பதால், பெரும்பாலான விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை நாடுகின்றனர். இங்கு, விவசாயிகள் கொண்டு வரும் உருளை கிழங்கு தரம் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன.வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து, தமிழகம் உட்பட பிற மாநிலங்கள் மற்றும் மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முத்துக்குமார் கூறுகையில், ''இடைதரகர்கள் இன்றி இங்கு உருளை கிழங்குகள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் வியாபாரிகளுக்கு கமிஷன் கொடுக்க தேவையில்லை. விவசாயிகள் இங்கு விற்பனை செய்வதற்கு முன்பாகவே, தாங்கள் கொண்டு வந்திருக்கும் உருளை கிழங்கிற்கு கடன் தொகை பெற்று கொள்ளலாம். விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கி கொள்ள ரூம் வசதிகளும் உள்ளன. இதனால், விவசாயிகள் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதை விட இங்கு விற்பனை செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாக இச்சங்கத்தில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீலகிரி விவசாயிகள் மேலும் பயன் பெறும் வகையில், ஊட்டி பூண்டு கடந்த வாரம் முதல் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் இடைதரகரின்றி இங்கு விற்பனை செய்ய முடியும்,'' என்றார்.
நடப்பாண்டு கூடுதல் லாபம்!
கடந்த, 2022----23ம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 89 டன் உருளை கிழங்கு, 32.14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023----2024ம் நிதியாண்டில், 20 ஆயிரத்து 677 டன் உருளை கிழங்கு, 54.20 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு, கூடுதல் லாபத்தை ஈட்டியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளை கிழங்கு, 3,800 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக நல்ல விலை கிடைத்து வருவதால் உருளை கிழங்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.