| ADDED : ஜன 09, 2024 08:56 PM
கூடலுார்;கூடலுாரில், 1.20 கோடி ரூபாய் செலவில் புதிய நகர சுகாதார மையம் கட்டடம் கட்டுவதன் மூலம், இடப்பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.கூடலுார் அரசு நகர சுகாதார மையம், புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை அருகே, சிறிய கட்டடத்தில், 2011 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மையத்தை ஒட்டிய சாலை ஓரத்தில் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வழியாக அடிக்கடி வாகனங்கள் செல்வதால், சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண மக்கள் வலியுறுத்தினர். இதனை ஏற்று, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அரசு நகர சுகாதார மையம் கட்டுவதற்காக 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, புதிய கோர்ட் அருகே, புதிய சுகாதார மைய கட்டடம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதன் மூலம் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது நகர சுகாதார மையம் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்டபட்ட பின், சுகாதார மையம் அங்கு மாற்றப்படும். அதேபோன்று நந்தட்டி பகுதியில், பழைய ஆரம்ப சுகாதார மையம் கட்டடம் இடிக்கப்பட்டு, 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது,' என்றனர்.