ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில், லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரும், மே மாதம் கோடை விழா நடக்க உள்ள நிலையில், சமவெளி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், நாடு முழுவதும், 7 கட்டங்களாக, லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் துவங்கி, ஜூன், 1ல் நிறைவடைகிறது. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 'தேர்தலில், தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும்,' என, தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, சுற்றுலா நகரமான நீலகிரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் தாவரவியல் பூங்காவில், மாநில தேர்தல் ஆணையம் மூலம், ஓட்டுப்போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, 'என் ஓட்டு என் கடமை' என்ற வாசகம் எழுதிய, 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நின்று, செல்பி எடுத்து விழிப்புணர்வு அடைந்து செல்கின்றனர்.