| ADDED : மார் 17, 2024 01:10 AM
ஊட்டி:-'வக்கீல்கள் புதிய சட்டங்களை கண்டிப்பாக கற்க வேண்டும்.' என, சென்னை ஐ கோர்ட் நீதிபதி சதீஷ்குமார் கூறினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி காக்கா தோப்பு நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை திறந்து வைத்த சென்னை ஐ கோர்ட் நீதிபதி சதீஷ்குமார் பேசியதாவது, 'இந்த அலுவலகம் திறந்ததை அடுத்து, மக்கள் பிற மாவட்ட வக்கீல்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மாவட்டத்தில் உள்ள வக்கீல்கள் இந்த நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகளை எடுத்து, மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழிவகை செய்வோம் என, உறுதி மொழி எடுக்க வேண்டும்.தற்போது, இந்த நீதிமன்றத்திற்கு உட்பட்டு, 29 வழக்குகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ளன. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்கு, நவீன கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சுப்ரீம் கோர்டில் நடைபெறும் வழக்குகளிலும் வக்கீல்கள் இங்கிருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆஜராகலாம். ஊட்டி கோர்ட் சாலை மேம்படுத்தும் திட்டத்திற்கான மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒதுக்கீடு பெறப்படும். கோத்தகிரி மற்றும் கூடலூர் கோர்ட் கட்டடத்திற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குன்னூர் கோர்ட் கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்காக, 16 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு மாற்றித்தருவதில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும். வக்கீல்கள் புதிய சட்டங்களை கண்டிப்பாக கற்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தனி மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதில் வக்கீல்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். நீதிமன்றங்களால் மட்டுமே இதை தடுக்க முடியாது. நீலகிரியில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வக்கீல்கள் பணியாற்ற வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோருக்கு எடுத்து சென்று தீர்வு காண வேண்டும். இவ்வாறு, நீதிபதி பேசினார். இதில், மாவட்ட பொறுப்பு நீதிபதி சக்திவேல், மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.