உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜனாதிபதி, பிரதமருக்கு அன்பு பரிசு பழங்குடியின தம்பதி உற்சாகம்

ஜனாதிபதி, பிரதமருக்கு அன்பு பரிசு பழங்குடியின தம்பதி உற்சாகம்

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடி பழங்குடியின செட்டில்மென்ட்டில், மொத்தம், 27 குடும்பங்கள் உள்ளன. இக்குடியிருப்பை சேர்ந்த ராஜலட்சுமி - ஜெயபால் தம்பதி, புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, மத்திய பழங்குடியின நல அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.வரும், 22ம் தேதி இருவரும் புதுடில்லி செல்கின்றனர். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிப்., 2ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர்.ராஜலட்சுமி - ஜெயபால் தம்பதி கூறியதாவது:பழங்குடியின மக்களுக்காக அறவழியில் போராடிய எங்களின் சேவையை பாராட்டும் விதமாக, தமிழக அரசின் வாயிலாக, மத்திய அரசு புதுடில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குடியரசு தினவிழாவில் பிரதமர், ஜனாதிபதி இருவரையும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதை கனவில் கூட நினைக்கவில்லை.காடர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எங்களை மத்திய அரசு அழைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு இருவருக்கும், நாங்கள் விவசாயம் செய்து விளைவித்த பொருட்களை அன்பு பரிசாக வழங்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வால்பாறை நகரிலிருந்து, 15 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லார்குடி செட்டில்மென்ட் கிராமத்தில், 2019ல் கனமழை பெய்த போது, கல்லார்குடி பழங்குடியின மக்களின் 27 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.மக்களை அங்கு வசிக்க அனுமதிக்க முடியாது என, வனத்துறையினர் மறுத்தனர். இதையடுத்து, தெப்பக்குளம் மேடு பகுதியில் மக்கள் குடிசை அமைத்தனர். வனத்துறையினர் அகற்றினர். அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.அப்போது, ராஜலட்சுமி தலைமையில் பழங்குடியின மக்கள் தெப்பக்குள மேடு பகுதியில் வீடு கட்ட அனுமதி கேட்டு அறவழியில் பல போராட்டங்கள் நடத்தினர்.கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் வீடு கட்ட அனுமதி வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கு, தலா, 1.5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இறுதியில் பட்டா கிடைத்தது. வீடு கட்டி, அங்கு செல்ல பாதை வசதியை மக்களே ஏற்படுத்தினர். இதற்கெல்லாம், காரணமான ராஜலட்சுமி - ஜெயபால் தம்பதிக்கு தான் தற்போது கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ