ஊட்டி:'தேர்தல் நடத்தை விதிகளை அலுவலர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் இம்மாதம், 20 ம் தேதி துவங்குகிறது. 27ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும் நாளாகும். ஏப்., 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. வேட்பாளர்கள் அறிவிப்பால் கட்சியினர் இடையே தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.அனைத்து அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதை தொடர்ந்து, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஜெ.ஜெ.,துாண் மறைக்கப்பட்டது. சேரிங்கிராஸ், காபி ஹவுஸ், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இருந்த கட்சி கொடி கம்பங்கள்; சுவரில் ஒட்டிய போஸ்டர்களை கட்சியினர் அகற்றினர். இதேபோல, மாவட்டம் முழுவதும், தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், '0423 -2957101, 0423 -2957102, 0423- 2957103, 0423- 2957104, மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 - 425 - 2782 ஆகியவற்றின் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.