| ADDED : பிப் 01, 2024 10:23 PM
அன்னுார்:'ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்,' என பயிற்சி வகுப்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அன்னுார் வட்டார வேளாண்துறை சார்பில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு கரியாம்பாளையத்தில் நேற்று நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார். 'அட்மா' தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.துணை வேளாண் அலுவலர் ராஜன் பேசுகையில்,விவசாயிகள் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த முள் கிலுவைச் செடிகளை உயிர் வேலியாக அமைக்க வேண்டும். இதனால் மண்வளமும் பாதுகாக்கப்படும். சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் வாயிலாக நீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம், என்றார்.வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) மோகன்ராஜ் சாமுவேல் பேசியதாவது :விவசாயத்தின் ஆதாரமே மண்தான். எனவே மண்ணின் வளத்தை காக்க வேண்டும். மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமான ஆக்சிஜனை மண் தருகிறது. மண், நீரை தேக்கி வைக்கக் கூடியதாகவும், நுண்ணுயிர்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். இதற்கு ரசாயன உர பயன்பாட்டை குறைக்க வேண்டும், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு தோட்டத்திலும் கால்நடை வளர்க்க வேண்டும். தோட்டத்தில் இலை, தழை, சருகுகளால் மூடாக்கு ஏற்படுத்த வேண்டும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்படும். மண்ணின் சத்து குறையாமல் இருக்க அதற்கு ஏற்ற பயிர்களை மாற்றி மாற்றி பயிரிட வேண்டும். தோட்டத்து நீரையும் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.உதவி வேளாண் அலுவலர் கவிதாஞ்சலி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு, முனுசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.