| ADDED : பிப் 23, 2024 11:19 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே 'சிவில் சப்ளை' குடோன் கட்டும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பந்தலுார் தனி தாலுகாவாக கடந்த, 1988 ஆம் ஆண்டு மாறியது. ஆரம்ப காலத்தில் நகராட்சி கட்டடத்தில் செயல்பட துவங்கிய நுகர்பொருள் வாணிப கழகம், தொடர்ந்து தனியார் கட்டடம் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான கட்டடங்களில் நடந்தது.அந்த இரண்டு கட்டடங்களும் பழமையான கட்டடங்கள் என்பதால், உணவு பொருட்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டு வந்தது.இதனால், 'அரசு சார்பில் சொந்த கட்டடம் கட்டி தர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், பந்தலுாரில் இருந்து இரும்புபாலம் செல்லும் சாலையில், வருவாய் துறைக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, சிவில் சப்ளை குடோன் அமைப்பதற்காக மீட்கப்பட்டது. தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்காக, 4- கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தேயிலை செடிகள் அகற்றப்பட்டு, கட்டுமான பணி மேற்கொள்வதற்கான இடம் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர். குழுவினர் கூறுகையில், 'கட்டுமான பணிகள் விரைவில் துவக்கும் வகையில், இங்குள்ள சாலையை நகராட்சி சற்று விரிவாக்கம் செய்து தர வேண்டும்,' என்றனர்.