சென்னை:'நீலகிரி மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறை பூத் அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:நீலகிரி மாவட்டம், பந்தலுார் தாலுகாவில், 20 நாட்களாக ஒரு சிறுத்தை புலி, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தது. அந்த சிறுத்தை புலி தாக்கியதில், ஒரு பெண், மூன்றரை வயது பெண் குழந்தை இறந்தனர்.இரு நாட்களுக்கு முன், சிறுத்தையை, மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்து, வண்டலுாருக்கு அனுப்பினர்.இந்நிலையில், பிடிபட்ட சிறுத்தை புலி தவிர, மற்றொரு சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக வனத்துறைக்கு அறிவுரைகள் வழங்கி, நடமாடி வரும் மற்றொரு சிறுத்தையும் பிடித்து, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். நகரப் பகுதிகளில், போலீஸ் பூத் அமைத்து, காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதுபோல், நீலகிரி மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க, 'வனத்துறை பூத்' அமைக்க வேண்டும்.வன விலங்குகளின் தாக்குதலில் இறந்தவர்களுக்கு, வனத்துறை வழியே வழங்கப்படும், 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சையுடன், இரண்டு லட்சம் ரூபாய்; காயம் அடைந்தவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சையுடன், 50,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.