உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இரண்டாம் முறையாக சாலை சீரமைப்பு பணி; சுற்றுலா மையங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை

 இரண்டாம் முறையாக சாலை சீரமைப்பு பணி; சுற்றுலா மையங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை

குன்னுார்: குன்னுார் டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் செல்லும் நகராட்சி சாலை தரமில்லாமல் அமைத்ததால், இரண்டாம் முறையாக சீரமைப்பு பணி துவங்கியது; சுற்றுலா மையங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. குன்னுார் நகராட்சியில், 1.43 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், லேம்ஸ்ராக் செல்லும் சி.எம்.எஸ்., சாலை, ஆப்பிள் பீ சர்ச் சாலை, குமரன் நகர் சாலை சீரமைக்க பணிகள் நடந்தன. அதில், சி.எம்.எஸ்., சாலை பணி துவங்கிய போது, பாதிப்பில்லாத தரமான இன்டர்லாக் கற்கள் அகற்றி, சீரமைக்கும் பணிகள் நடந்தபோது, நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தரமில்லாமல் இருந்ததால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. பணிகள் நடந்த போதே வாகனங்கள் சென்றதாலும் சாலையின் தரம் மேலும் பாதிப்பானது. இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தரமாக சாலை அமைக்க உத்தரவிட்டார். இதனால், இரண்டாம் முறையாக சாலை சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. பணிகள் முடியும் வரை இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சி.எம்.எஸ்., பகுதியில் போலீசார், ஊர்காவல் படையினர், சுற்றுலா வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' சாலை அகலம் குறுகலான இடத்தில் வாகனங்களை அனுமதித்து, மறுபுறம் சாலை செப்பனிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகளவில் வாகனங்கள் வருவதால், போலீசாரும் சிரமப்படுகின்றனர். இதனால், இப்பணிகள் முடியும் வரை மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை