உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தி... 30 சதவீதம் குறையும்!வெயிலால் வெகுவாக பாதிக்கும் செடிகள்

வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தி... 30 சதவீதம் குறையும்!வெயிலால் வெகுவாக பாதிக்கும் செடிகள்

குன்னுார்:மலை மாவட்டத்தில் தொடரும் வெயிலின் தாக்கத்தால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து, 30 சதவீதம் வரை தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட மிகவும் மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குன்னுார் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு, 27 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்துள்ளது.

குறைந்து வரும் விலை

இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் தேயிலை செடிகள் பாதித்து வருகிறது. ஆண்டுதோறும் , டிச; ஜன., மாதத்தில் உறைபனியின் போது விளைந்த பசுந்தேயிலையில் தயாராகும் தேயிலை துாளுக்கு, ஏப், மே மாதங்களில் நடக்கும் தேயிலை ஏலத்தில் நல்ல விலை கிடைக்கும்.நடப்பாண்டு விளைந்த பசுந்தேயிலைக்கு விலை சரிவர கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் சராசரி விலை குறைவாகவே உள்ளது.

ஸ்பிரிங்ளர் தண்ணீர்

கால நிலை மாற்றத்தால், மாவட்டம் முழுவதும் மகசூல் குறைந்து வருவதால், சில இடங்களில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மற்றும் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.மழை பெய்தால் மட்டுமே ஓரளவு தேயிலை விவசாயம் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். சில எஸ்டேட்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேயிலை செடிகளை பாதுகாக்க நீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளது.இதனால், தேயிலை எஸ்டேட் நிர்வாகங்கள் மட்டுமல்லாமல், தோட்ட தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் முருகேசன் கூறுகையில், ''கடந்த மார்ச் மாதம் பசுந்தேயிலை மகசூல் அதிகமாக இருந்தது. கடந்த இரண்டரை மாதமாக மழை இல்லாத நிலையில், வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கூடுதலாக உள்ளது. இதனால், பல இடங்களிலும் தேயிலை செடிகள் கருகி பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தால் பசுந்தேயிலை வளராமல் பாதிக்கிறது. அனைத்து எஸ்டேட்களிலும் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.நீராதாரம் இருந்த இடங்களில் இருந்து ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சினாலும் செடிகள் பாதுகாக்கப்படும் என்பதை தவிர, மகசூல் அதிகரிக்க வாய்ப்பில்லை.இதனால், நடப்பாண்டு தேயிலை உற்பத்தி, 30 சதவீதம் வரை குறையும் நிலை உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி