| ADDED : பிப் 23, 2024 11:00 PM
அன்னுார்:அன்னுார் அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.அன்னுார் அருகே காட்டம்பட்டியில், நேற்று முன்தினம் இரண்டு லாரிகளில், அனுமதியின்றி, சட்டவிரோதமாக சிலர் மண் எடுத்து வந்தனர். பொதுமக்கள் அவற்றை தடுத்து நிறுத்தி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் அறிவுடை நம்பி, கிராம உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு சென்று இரண்டு லாரிகளையும் பிடித்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி லாரி ஓட்டுனர்களிடம் கூறியபடி இருசக்கர வாகனத்தில் உடன் சென்றனர். அதில் ஒரு லாரி வேகமாக தப்பி சென்று விட்டது. மற்றொரு லாரியில் இருந்த டிரைவர், லாரியில் இருந்த மண்ணை கொட்டிவிட்டு, லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்த அன்னுார் போலீசார், லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, பதுவம்பள்ளியைச் சேர்ந்த தினேஷ்குமார், 31. என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி என, தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அன்னுார் கோட்டில் ஆஜர்படுத்தினர். மண்ணுடன் தப்பிச்சென்ற மற்றொரு லாரியின் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.