| ADDED : மார் 14, 2024 11:21 PM
கூடலுார்;முதுமலையில் உள்ள நீர்நிலை ஓரத்தில் மூன்று குட்டிகளுடன் காணப்பட்ட புலியை பார்த்த சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர்.முதுமலை வனப்பகுதி வறட்சியால் பசுமை இழந்து காணப்படுகிறது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பல நேரங்களில் வன விலங்குகளை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.இந்நிலையில், முதுமலை கார்க்குடி வனப்பகுதியில் உள்ள நீர்நிலை அருகே, மூன்று குட்டிகளுடன், அவ்வப்போது புலி உலா வருவதை சில சுற்றுலா பயணிகள் பார்த்து வியப்படைந்தனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'முதுமலையில், வறட்சியான சூழலில் விலங்குகளை பகலில் பார்ப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில், மூன்று குட்டிகளுடன் புலியை பார்த்து வியப்படைந்துள்ளோம்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கார்குடி அருகே புலி ஒன்று காட்டெருமையை வேட்டையாடி, அதனை குட்டிகளுடன் உட் கொண்ட போது, ஓய்வெடுத்தது. அப்போது அதிர்ஷ்டவசாக சுற்றுலா பயணிகளுக்கு தென்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனங்களில் செல்லும் போது அமைதியாக இருந்தால் பகலில் புலியை பார்க்க வாய்ப்புள்ளது,' என்றனர்.