ஊட்டி: ஊட்டியில் நடந்த குடியரசு தினவிழாவில், 15 பயனாளிகளுக்கு, 24.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு, நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் முன்னிலையில், கலெக்டர் அருணா, தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.தொடர்ந்து, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, 18 போலீசாருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம், காவல்துறை சார்பில், 14 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.வருவாய் துறை சார்பில், 11 பேர்; மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், 5 பேர்; தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியா திட்ட அலுவலகம் சார்பில், தலா 4 பேர்; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்ட தொகுப்பாளர்கள் என, தலா 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவ கல்லுாரி பொது சுகாதாரம், முதன்மை கல்வி அலுவலகம், கருவூலம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தோட்டக்கலைத்துறை, பால்வளத்துறை, நகராட்சிகள், சமூக நல துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நலத்துறை, பொதுப்பணித்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனம் துறைகளில் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உயிர்களை காப்பாற்றியருக்கு கவுரவம்
குன்னுார் மலை பாதையில் நடந்த விபத்துகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு, பல உயிர்களை காப்பாற்றிய, 8 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், போரில் வீர மரணம் அடைந்த படைவீரரின் தாயாருக்கு வருடாந்திர பராமரிப்பு மானிய தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்; தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒருவருக்கு, 20 லட்சம் ரூபாய் கல்வி கடனுதவி ஆணை வழங்கப்பட்டது.இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு இரண்டு பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான வைப்பு தொகை பத்திரம்; மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில், இரு பயனளிகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், 8,000 ரூபாய், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மூவருக்கு, 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவர்கள்; பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி; மாற்று திறனாளி நலத்துறை சார்பில், இருவருக்கு, 1.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர நாற்காலி மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், இருவருக்கு, 42 ஆயிரத்து, 500 ரூபாய் என, மொத்தம், 24.18 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.