| ADDED : மே 03, 2024 05:16 AM
ராமநாதபுரம்: வெளியூர்களில் இருந்து வரத்து குறைவால் ராமநாதபுரத்தில் வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கட்டு ரூ.500க்கு விற்றது விலை உயர்ந்து ரூ.900 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவே சாகுடி செய்கின்றனர். இதனால் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள் வெளி மாவட்டங்களிலிருந்து வருகிறது. சுப முகூர்த்த தினங்கள், கோயில் விழாக்களால் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.அதே சமயம் வெளியூர்களிலிருந்து வரத்து குறைவாக உள்ளதால் கடந்த மாதத்தைவிட விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு (180 முதல் 200 இலை) ரூ. 800 முதல் ரூ.900 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. சாப்பாட்டு இலை ரூ.5க்கு விற்கின்றனர்.இதனால் ஓட்டல்களில் சாப்பிடவும், பார்சல் வழங்கவும் சிலர் பேப்பர் இலையை பயன்படுத்துகின்றனர்.ராமநாதபுரம் வியாபாரி வி. செல்வபாண்டி கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி ஆகிய இடங்களில் இலைக்கட்டு வாங்குகிறோம்.வெயிலின் தாக்கம் காரணமாக வாழை இலை வரத்து குறைந்துள்ளது. விலை உயர்வால் ஓட்டல்களில் இலை வாங்குவது குறைந்துள்ளது. மேலும் இலைகள் கிழிந்தும் வருகிறது. இதனால் அதிக முதலீடு செய்து, எதிர்பார்த்த விற்பனை இல்லை என்றார்.