| ADDED : ஜூன் 01, 2024 04:25 AM
சாயல்குடி: சாயல்குடியில் பாசன கண்மாய்க்குள் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.சாயல்குடி பாசன பெரிய கண்மாய் 512 ஏக்கர் பரப்பளவு கொண்டது.கண்மாயின் தெற்கு பகுதியில் சாயல்குடி பேரூராட்சி எல்லை உட்பட்ட நகர் பகுதிகள் அதிகம் உள்ளன. சாயல்குடி தண்ணீர் டேங்க் தெருக்களில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் ரோட்டில் அதிகளவு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது.சாயல்குடி பாசன கண்மாய் கரையை ஒட்டி ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளதால் அவ்விடம் முழுவதும் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. கடந்த டிச., மாதத்தில் பெய்த மழை மற்றும் சமீபத்தில் பெய்த கோடை மழையால் பாசன கண்மாய் எதிர்பார்த்த அளவுக்கு நிறைந்துள்ளது.கண்மாய் கரையோரம் உள்ள நீர்நிலைப் பகுதிகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு இறைச்சி கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீருக்குள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் மாசடைந்துள்ளது.எனவே உரிய மழை பெய்தும் அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினரும் ஆய்வு செய்து கண்மாய் கரையோரம் குப்பை கொட்ட விடாமல் தடுக்கவும், நாள்பட்ட குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.