| ADDED : டிச 12, 2025 04:35 AM
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் ஜன.2,ல் மரகத நடராஜருக்கு சந்தனம் படிகளைதல் நடக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ.,ல் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவஸ்தலமான உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் அபூர்வ பச்சை மரகதத்தாலான மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்டு நடராஜர் இருப்பார். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனம் களையப்படும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா டிச., 25ல் மங்கள விநாயகர் கோயிலில் அனுக்ஞை மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஜன. 2 காலை 8:30 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் படிக்களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முழுவதும் தொடர்ந்து 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. அதிகாலை 1:00 மணி முதல் 2:00 மணிக்குள் மீண்டும் அபிஷேகம் தீபாராதனைகளுக்கு பின் திரையிடப்பட்டு புதிதாக மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனம் காப்பிடப்படும். அதிகாலை 4:30 மணிக்கு அருணோதய காலத்தில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இங்குள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. புதிய சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஜன., 3ல் கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்தி களுக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாச சுவாமிகளுக்கு காட்சி கொடுத்த பின் விழா நிறைவடைகிறது.