| ADDED : டிச 01, 2025 07:06 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல், சாம்பக்குளம், அப்பனேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைகள் விதைத்துள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு முளைக்க தொடங்கியது. தற்போது விவசாயிகள் களை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பா.ஜ., முதுகுளத்துார் மண்டல பார்வையாளர் சேதுராமு கூறியதாவது, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் விவசாயம் செய்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். தனியார் கடைகளில் உரம் வாங்க சென்றால் காம்ப்ளக்ஸ் உரம் சேர்ந்து வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மாவட்ட அதிகாரிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.