| ADDED : டிச 28, 2025 05:22 AM
திருப்புல்லாணி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணு பூங்காவில் பராமரிப்பு பணிகள் துவங்கியது. மலர் கண்காட்சி நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் அருகே அச்சடிபிரம்பு பகுதியில் ஐந்திணை மரபணு பூங்கா 2015ல் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 25 ஏக்கர் கொண்ட பூங்காவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மரபு சார்ந்த தாவரங்கள், மரங்கள் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள தாவரங்கள் அதிகளவு காணப்படுகிறது. தடாகங்கள், குகைகள், இயற்கை புல்வெளிகள், குரோட்டன்ஸ் செடிகளின் அணிவகுப்பு, ஏராளமான குடில்கள், ஓய்வறைகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, மனித குரங்கு, டைனோசர், யானை, மான், முயல் உள்ளிட்டவைகளின் சிற்பங்கள் உள்ளிட்டவற்றுடன் பார்வையாளர்களை கவரும் விதமாக பசுமை போர்த்தியது போன்று ஐந்திணை பூங்காவின் கட்டமைப்புகள் உள்ளன. கோடையிலும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பூங்கா அருகே 15 ஏக்கரில் பண்ணை குட்டைகள் உள்ளன. அவற்றிலிருந்து எல்லா காலங்களிலும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஐந்திணை பூங்காவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள பேவர் பிளாக் கற்கள் மற்றும் பிளாட்பாரங்கள் தரமற்ற பணியாக இருந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேதமடைந்து விட்டது. சேதமடைந்த நிலை குறித்து குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. சேதமடைந்த தரைத்தளங்களில் பார்வையாளர்கள் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. எனவே தரமான தரைத்தளங்களும், பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக ஐந்திணை பூங்கா நடைமேடை மற்றும் பார்வையாளர்கள் நடந்து செல்லக்கூடிய பகுதிகள் அனைத்திலும் புதிய பேவர் பிளாக் கற்கள் மற்றும் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2019 இல் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதே போல் இங்கு மீண்டும் மலர் கண்காட்சி நடத்தவும், பொதுமக்களை கவர்வதற்கு கூடுதல் அம்சங்களுடன் பொழுது போக்கு அம்சங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.