ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மோர்பண்ணை கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டாவும், சோழந்துார் மக்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட 323 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன்தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.மாவட்ட சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைச் சார்பில் 34 பேருக்கு ரூ.1 லட்சத்த 91ஆயிரத்து 361 செலவில்இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். பள்ளிக்கு கட்டடம் வேண்டும்
சோழந்துாரை சேர்ந்த பானை மணி, தினமலர் நாளிதழில் வெளியான செய்தி ஆதாரத்துடன் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கூடுதல் கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி மனு அளித்தார். ஊருணியை சுத்தம் செய்யுங்க
ராமநாதபுரம் மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா குழுசெயலாளர் செல்வராஜ் மனு அளித்தார். ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வெளிசோத்துாருணியில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. அதனை தடுத்து ஊருணியை சுத்தம் செய்து துார்வார வேண்டும் என வலியுறுத்தினார். வீட்டுக்கு பட்டா தாங்க
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்பண்ணை மீனவகிராம மக்கள் ஏ.ஐ.டி.யூ.சி., நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினருடன் இணைந்து மனுஅளித்தனர். இதில், மோர்பண்ணை கிராமத்தில் 150 வீடுகள் கட்டி 15 ஆண்டுகளாக குடியிருக்கிறோம். இலவச பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதுபோல முதியோர் உதவித்தொகை, தனிநபர்வீடுவழங்கும் திட்டம்,குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 323 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனலட்சுமி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர்,ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கல்யாணசுந்தரம் பங்கேற்றனர்.